by Vignesh Perumal on | 2025-08-03 01:25 PM
"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனை அவமதித்ததாகக் கூறி, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனைக் கண்டித்து, தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் தொடக்க விழாவில், வரவேற்பு பேனரில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் புகைப்படம் இடம்பெறாததால் அவர் அதிருப்தி அடைந்தார். மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, தங்க தமிழ்செல்வன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி முழுவதும் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டர்களில், "கண்டிக்கின்றோம், ஒய்வின்றி உழைக்கும் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் ஆணைக்கிணங்க 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட துவக்க விழாவில் கலந்துகொண்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டிபட்டி மக்களுக்கு அயராது உழைத்திட்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் MA.,MP அவர்களை ஒருமையில் பேசியும், அவரை அவமதித்தும் மேடையில் தவறாக நடந்துகொண்ட ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் MLA அவர்களை வன்மையாக கண்டிப்பதோடும், திரு.தங்க தமிழ்செல்வன் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடும் தொடர்ந்து கட்சியையும், பொது மக்களையும் மதிக்காத MLA அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள், திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்கள் வெளிப்படையாகத் தெரிய வந்ததால், இது கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.