| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பழநியில் சூப்பர் திட்டம்...! பக்தர்கள் வரவேற்பு...! அமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-06-15 03:20 PM

Share:


பழநியில் சூப்பர் திட்டம்...! பக்தர்கள் வரவேற்பு...! அமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்...!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு புதிய மின்கல சிற்றுந்துகளின் இயக்கத்தையும், பூஜை விவரங்கள் மற்றும் கோவில் தகவல்கள் அடங்கிய மின்னணு திரையையும் (LED DISPLAY BOARD) மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (15.06.2025) தொடங்கி வைத்து திறந்து வைத்தார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் மின் இழுவை இரயில் நிலையம், படிப்பாதை, கம்பிவட ஊர்தி நிலையம், சுற்றுலா பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு சிரமமின்றி சென்றுவர, கிரிவீதியில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பல்வேறு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, 11 இருக்கைகள் கொண்ட 17 மின்கல கார்களும், 23 இருக்கைகள் கொண்ட 10 மின்கல மினி பேருந்துகளும், 2 டீசல் மினி பேருந்துகளும் என மொத்தம் 29 வாகனங்கள் சேவையில் உள்ளன.

இந்த வரிசையில், பக்தர்களின் வசதியை மேலும் அதிகரிக்கும் வகையில், கண்ணன் இரும்பு எஃகு நிறுவனத்தின் (Kannappan Iron and Steel Company Pvt Ltd. (KISCOL)) உரிமையாளர் திரு.பி.எஸ்.டி.கண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, மதுரை மண்டல துணை பொது மேலாளர் திரு.டி.கண்ணன் ஆகியோர் தலா ஒரு 23 இருக்கைகள் கொண்ட மின்கல சிற்றுந்தினை திருக்கோயில் நிர்வாகத்திற்கு உபயமாக வழங்கியுள்ளனர்.


இந்த இரண்டு புதிய வாகனங்களின் இயக்கத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம், கிரிவீதியில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், திருக்கோயில் தொடர்பான காலபூஜை விவரங்கள், கட்டணமில்லா சேவைகள் மற்றும் கட்டண சேவைகள் குறித்த தகவல்களை எளிதில் அறியும் வகையில், ஒரு புதிய மின்னணு திரை (LED DISPLAY BOARD) அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் படிப்பாதையின் அடிவாரத்தில் உள்ள அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் அருகில், 20 அடி நீளம் மற்றும் 10 அடி அகலம் கொண்ட இந்த மின்னணு திரை, திருப்பூரை சேர்ந்த M/s. கேட்ஸ் வேர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.க.ஜெயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரால் உபயமாக வழங்கப்பட்டு, சுமார் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு திரையையும் மாண்புமிகு அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர்/செயல் அலுவலர், துணை ஆணையர், உதவி ஆணையர், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய வசதிகள் பழனிக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment