by aadhavan on | 2025-06-09 08:55 PM
மஹாபெரியவா ஜெயந்தி நிகழ்வில் பேசிய பட்டிமன்ற பேச்சாளர் பி.மணிகண்டன் மற்றும் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்..
» மு. ஆதவன்
இறைவன் மீது பக்தி செலுத்துவதை காட்டிலும், ஏழை எளியோருக்கு தொண்டு செய்பவருக்கே அவரது அருள் முதலில் கிடைக்கும் என பட்டிமன்ற பேச்சாளர் பி.மணிகண்டன் பேசினார்.
காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 'பெரியவா என்னும் பேரமுதம்' எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பி.மணிகண்டன் பேசியதாவது; மதம் கடந்த மனித நேயம் பரப்பியவர் காஞ்சி மகா பெரியவர். பாகுபாடுகள் இல்லாமல் பலராலும் போற்றப்பட்டவர். ஜீயராலும் பாராட்டப்பட்ட மடாதிபதி ஒருவர் உண்டென்றால், அது காஞ்சி மகா பெரியவர் மட்டுமே. நூறாண்டு வாழ்ந்த மடாதிபதிகளில் எந்த கெட்ட பெயரும், கிசுகிசுவும் இல்லாமல் வாழ்ந்தவர் அவர். பிருந்தாவனத்தில் மட்டுமே அவர் இல்லை. உள்ளன்போடு அவரை எங்கு பிரார்த்தனை செய்கிறோமோ அங்கெல்லாம் அவர் அருள் செய்கிறார். காஞ்சிபுரம், ஓரிக்கை, கும்பகோணம், இளையாத்தங்குடி போல மதுரை அழகார்கோயில் பொய்கைக்கரை பட்டியில் அமைய உள்ள கோயிலிலும் அவரது சாந்நித்தியம் பக்தர்களுக்கு சீக்கிரமாக கிடைக்க இருக்கிறது.
காஞ்சி மஹா பெரியவா, பக்தர்களிடம் முதலில் கேட்பது, சாப்பிட்டாரா? என்பதுதான். யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியதோடு, அதன்படியே செய்தும் காட்டியவர். அதற்காக 'பிடி அரிசி திட்டம்' என்னும் மகத்தான திட்டத்தையும் இந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். நாள்தோறும் சமைக்கும் முன்பாக ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து வைத்து, அதனை மாதத்தின் முடிவில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று போதனை செய்தவர். ஏழைகளுக்கு செய்யும் அந்த தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டு என்பதை எல்லோருக்கும் சொன்னவர் அவர். தொண்டு செய்பவருக்கு தான் இறைவனின் அருள் சீக்கிரமாக கிடைக்கும்.
இறைவன் மீது பக்தி செலுத்த ஆடம்பரம் தேவையில்லை. கண்ணீரோடு, மனதில் தூய பக்தி கொண்டு ஒரு பூ சமர்ப்பித்தாலும் அவரது அருள் நமக்கு கிடைக்கும். திருமணம், குழந்தை, வேலை, சொந்த வீடு, பணம் என வெகு சில விஷயங்களை மட்டும் தான் நம்மால் பிரார்த்தனை செய்து கேட்க முடியும். நம் தகுதிக்கு ஏற்றார் போல்தான், நாம் இறைவனிடம் கேட்போம். இவ்வாறு நிபந்தனையோடு பிரார்த்தனை செய்யாமல், தூய பக்தியோடு மட்டும் பிரார்த்தித்தால் அவர் நமக்கு என்ன வேண்டுமோ அதை அவர் கொடுப்பார்.
அதனால்தான் அவர் ஜகத்குரு, ஏழைகளின் அட்சய பாத்திரம், அனாதரட்சகன், இன்னல் போக்கும் சத்குரு என போற்றப்படுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தியான இன்று (ஜூன். 10) எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில், காலை 7மணியிலிருந்து ஸ்ரீ மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள், மகன்யாசம், ஹோமம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. 8 மணிக்கு பல் துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு ஸ்ரீமகா பெரியவா விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விருதினை வழங்குகிறார். காலை 11:30 மணிக்கு ஸ்ரீ ஆய்க்குடி குமார் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.