by Vignesh Perumal on | 2026-04-02 09:03 PM
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் கலையரசன், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டதோடு, விசாரணையின் போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் 'மனமகிழ் மன்றம்' நடத்தி வருபவர் சுகுமார். இவரது தொழில் தொடர்பாகச் சில சலுகைகள் காட்டவும், தொந்தரவு செய்யாமல் இருக்கவும் சார்பு ஆய்வாளர் கலையரசன் ₹7,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகுமார், இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைச் சுகுமார் எடுத்துச் சென்றார்.
பழனி பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் வைத்து, சுகுமாரிடமிருந்து கலையரசன் ₹7,000 பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் அவரைச் சூழ்ந்து கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
பிடிபட்ட இடத்திலேயே லஞ்ச ஒழிப்புப் போலீசாருடன் கலையரசன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக அவர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, ஆத்திரமடைந்த கலையரசன் அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்து உடைத்து, தனது கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், கலையரசனின் கையில் இருந்த உடைந்த பாட்டில் துண்டைப் பிடுங்க முயன்றார். இந்த மோதலில் கலையரசன் மற்றும் டிஎஸ்பி நாகராஜன் ஆகிய இருவருக்கும் கைகளில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த சார்பு ஆய்வாளர் கலையரசன் மற்றும் டிஎஸ்பி நாகராஜன் ஆகிய இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஒரு வழக்கும், தற்கொலைக்கு முயன்றது மற்றும் அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக மற்றொரு வழக்கும் கலையரசன் மீது பதியப்பட வாய்ப்புள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து சார்பு ஆய்வாளர் கலையரசன் விரைவில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புச் சோதனையின் போதே ஒரு காவல் அதிகாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழகக் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. கைது..! காவல் நிலையத்திலேயே தற்கொலை முயற்சி..!
லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. கைது..! காவல் நிலையத்திலேயே தற்கொலை முயற்சி..!
வாய்ப்பு மறுப்பு - முன்னாள் எம்பி அதிருப்தி ! அறிவாலயம் வைத்திருக்கும் செக் !!
ரேபிஸ் - சிறுமி உயிரிழந்த பயங்கரம் ! நிலைகுலைந்த பெற்றோர் !! அரசே, செய்த இறுதிச் சடங்கு !!!
அமைச்சர் ஐ.பெரியசாமி காரில் அதிரடி சோதனை...!