by aadhavan on | 2025-09-25 08:13 PM
பவர் ஆஃப் பீஸ் என்ற தலைப்பில் பேசிய ரோட்டரி சங்கங்களின் கற்றல் குழு பயிற்றுனர் அஃப்ரோஸ்.
» Rtn. மு. ஆதவன்
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் உலக அமைதிக்கான மையம் அமைக்கப்படும் என மதுரையில் நடைபெற்ற ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தெரிவித்தனர்.
மதுரை யூனியன் கிளப் அரங்கில், மதுரையில் உள்ள ரோட்டரி சங்கங்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மதுரை மிட் டவுன், கிழக்கு, சங்கமம், ராயல், ஜல்லிக்கட்டு மற்றும் தெற்கு ஆகிய ரோட்டரி சங்கங்கள் இணைந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின. சங்கங்களில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அமைதியின் வலிமை (பவர் ஆஃப் பீஸ்) என்ற தலைப்பில், ரோட்டரி சங்கங்களின் கற்றல் குழு பயிற்றுனர் அஃப்ரோஸ் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது; உலகின் மிக வலிமையான ஆயுதம் அமைதி மட்டுமே. அதனை பயன்படுத்துபவர் மட்டுமே வாழ்வில் வெற்றி பெறுகிறார். எதையும் சண்டை போட்டு சாதிப்பதை விட அமைதியாக இருப்பதன் மூலம் வெற்றி பெறலாம். சண்டையால் உடனே சாதித்தது போலவும் அமைதியாக இருப்பதால் அப்போது தோற்றது போலவும் தெரியும். உண்மையில் அமைதி தான் எப்போதும் வெல்லும். எனவேதான், அனைவருக்கும் நன்மை செய்யுங்கள் என்று எல்லாம் மதங்களும் சொல்கின்றன.
நம் நாட்டுக்கு இப்போதும், எப்போதும் முக்கிய தேவை அமைதி மட்டுமே. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே எம்.ஐ.டி., கல்லூரியில் உலக அமைதிக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைதியை வலியுறுத்தி பல்வேறு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள், கருத்து அரங்குகள் அங்கே நடத்தப்படுகின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் ரோட்டரி சார்பில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அப்பணிகள் முழுமை பெறும்"
இவ்வாறு பேசினார்.