by Vignesh Perumal on | 2025-09-21 03:16 PM
10 பேர் சேர்ந்து ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும் அழித்துக்கொண்டிருப்பதாக நடிகர் வடிவேலு குற்றஞ்சாட்டியுள்ளார். திரைப்பட நடிகர்கள் குறித்து அவதூறுகளைப் பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னை, தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு, சமீபகாலமாக யூடியூபில் சினிமா கலைஞர்கள் குறித்து அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகப் புகார் தெரிவித்தார்.
"சினிமாவில் பெரிய நடிகர்களாக உள்ளவர்களை 10 பேர் சேர்ந்து தங்கள் சுயலாபத்துக்காகத் தவறான தகவல்களை வெளியிட்டுச் சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூபில் வரும் தவறான விமர்சனங்களால் ரசிகர்கள் மத்தியில் கலைஞர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது" என்று அவர் கூறினார். நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வடிவேலு கேட்டுக்கொண்டார்.
வடிவேலுவின் புகாரைக் கேட்ட நடிகர் சங்கத் துணைத் தலைவர் கருணாஸ், "அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
சினிமா கலைஞர்கள் மீது அவதூறு பரப்புவோரைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்