by Vignesh Perumal on | 2025-06-02 12:46 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல நட்சத்திர வீரருமான விராட் கோலிக்கு சொந்தமான 'One8 Commune' என்ற உணவகம் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உணவகத்தில் புகைப்பிடிப்பதற்கென தனி இடத்தை ஒதுக்காததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள விராட் கோலியின் 'One8 Commune' உணவகத்தில், புகையிலைத் தடைச் சட்ட விதிகளின்படி, புகைப்பிடிப்பதற்கான தனி இடம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து உணவகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விராட் கோலியின் 'One8 Commune' உணவகம் ஏற்கனவே பலமுறை விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை மாதம், பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் உள்ள 'One8 Commune' பப், நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 1.30 மணி வரை செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, அப்போதும் உணவகத்தின் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் 'One8 Commune' உணவகத்திற்கு தீ பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் என்.ஓ.சி. (NOC) இல்லாமல் செயல்பட்டதற்காக நோட்டீஸ் அனுப்பியது. சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, மும்பையில் உள்ள 'One8 Commune' உணவகத்தில் வேட்டி அணிந்து சென்ற ஒரு தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஃபோனோகிராஃபிக் பெர்ஃபார்மன்ஸ் லிமிடெட் (PPL) பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களை இசைக்க 'One8 Commune' டெல்லி கிளையை டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் விராட் கோலியின் உணவகம், தற்போது புகைப்பிடிப்பதற்கான தனி இடம் ஒதுக்காததால் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!
புதிய கூட்டணிக்கு வியூகம் - தமிழக அரசியலில் பரபரப்பு ! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !!
தமிழகத்தில் பதவியேற்பு...! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு...!
தமிழகத்தில் பதவியேற்பு...! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு...!
யார் யாருக்கு சீட்? அதிரடி காட்டும் எடப்பாடி ! கலக்கத்தில் கட்சியினர் !!