| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

கமல் பேனர் கிழிப்பு...! அமைப்புகள் எதிர்ப்பு...! திடீர் பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2025-05-28 10:49 AM

Share:


கமல் பேனர் கிழிப்பு...! அமைப்புகள் எதிர்ப்பு...! திடீர் பரபரப்பு...!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படத்தின் பேனர்கள் பெங்களூருவில் கன்னட அமைப்பினரால் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டன. 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், "தமிழில் இருந்து உருவானது கன்னடம்" என்று பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ஆத்திரமடைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் கமல்ஹாசன் பேசியது குறிப்பிடத்தக்கது.

'தக் லைப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரைக் குறிப்பிட்டு, "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். எனவே, நீங்களும் (கன்னடம்) அந்த வரிசையில் உள்ளீர்கள்," என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து கன்னட அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மொழிக்குத் தனித்துவம் இல்லை என்றும், அது தமிழிலிருந்து உருவானது என்றும் கமல்ஹாசன் கூறியது, கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கன்னட அமைப்புகள் கருதுகின்றன.

இதன் விளைவாக, கன்னட ரக்ஷண வேதிகே போன்ற அமைப்புகள் பெங்களூருவில் 'தக் லைப்' படத்தின் விளம்பரப் பேனர்களைக் கிழித்து அகற்றின. மேலும், கமல்ஹாசன் கர்நாடகாவிற்கு வந்தால் அவருக்கு கருப்பு மை பூசப்படும் என்றும், அவரது திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியிடப்படாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "நடிகர்கள் எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும். தமிழைப் பாராட்ட நடிகர் கமல், கன்னடத்தை அவமதித்துள்ளார். கன்னடம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. கமல்ஹாசனின் இந்த பேச்சு 6.5 கோடி கன்னடர்களின் மனதைப் புண்படுத்திவிட்டது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. கர்நாடகாவில் படத்திற்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, இந்த விவகாரம் எவ்வாறு கையாளப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த மொழி சர்ச்சை, 'தக் லைப்' படத்தின் கர்நாடக வெளியீட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment