by boopalan on | 2025-03-30 07:01 PM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, நீண்ட நேரம் பேசி, விஜய்க்கு இரு வம்புகளை இழுத்துவிட்டுள்ளார் என்றே சொல்லலாம்.
இதைத்தான் திமுக ஐடி விங் டிரோல் செய்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசினார். அவர் நீண்ட நேரம் பேசியிருந்தார். ஆதவ் பேசுகையில், "தமிழகத்தில் அண்ணாமலையை செட் செய்து வைத்துவிட்டு திமுக அரசியல் செய்கிறது.
புலி அமைதியாக இருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் ஆடு வந்து சீண்டுவது போல் இருக்கிறது. நாங்கள் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்கிறோம் என விமர்சிக்கிறார்கள். ஆனால் 2026 ஆம் ஆண்டு உங்களை வீட்டுக்கு அனுப்பும் அரசியலாக எங்களுடையது இருக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஜாதி பார்த்து சீட் கொடுப்பதாக சம்பந்தமே இல்லாமல் கிளப்பி வருகிறது. இங்கு ஜாதி, மதம், பேதம் எல்லாம் பார்ப்பதே இல்லை. எல்லாரும் ஒன்றுதான். தமிழகத்தில் உண்மையிலேயே ஜாதியை வளர்த்தது யாரு என்பது எல்லோருக்குமே தெரியும்.
நாங்கள் மக்களை சந்திக்கவில்லை, போராட்டக் களத்திற்கு வரவில்லை என விமர்சிக்கிறார்கள். இன்னும் 2 மாதங்களில் பாருங்கள். போராட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறோம். மேலும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர, அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் போட்டோ எடுத்துக் கொண்டு வரக் கூடாது.
கூட்டணி கட்சிகளின் குரல் வளையை நெரிக்கிறார்கள். வைகோவை எப்படி காலி செய்தார்கள் என்று தெரியுமா, வெறும் 6 தொகுதிகளை கொடுத்துவிட்டு தனது சின்னத்தில் நிற்குமாறு நிர்பந்தித்தார்கள். ஒரு அமைச்சர் முன்பு வைகோ மகன் கண்ணீர் விடும் நிலைதான் இருந்தது. இதனால் மதிமுகவுக்கு எம்எல்ஏக்களே கிடையாது என்ற நிலை உள்ளது.
எங்கள் தலைவர் ரூ 1000 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அவர் என்ன பணம் சம்பாதிக்கவா அரசியலுக்கு வருகிறார்? மக்களுக்கு சேவை செய்ய வருகிறார். அந்த ரூ 1000 கோடி ஊதியத்தை உதறி தள்ளிவிட்டு வருகிறார். அது போல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஒருவரின் பிடியில் திரையுலகமே இயங்கும்படி செய்கிறார்கள் என கடுமையாக விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். இப்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் இரு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஒன்று- ரெட் ஜெயண்ட் மூவிஸ் குறித்து பேசியது. அந்த தயாரிப்பு நிறுவனத்தை தனது குருவி படம் மூலம் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதே விஜய்தான். அவர்தான் தேங்காய் உடைத்து அந்த நிறுவனத்திற்கு பூஜை போட்டார். தனது பீஸ்ட் படமும் அவர்களுடையதுதான். தயாரிப்பு நிறுவனம் மட்டுமில்லாமல் distribution உரிமையையும் கொடுத்தது யார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இது ஆதவ்வுக்கு தெரியாவிட்டாலும் விஜய்க்கு தெரியும். அதே வேளையில் தொழில் வேறு அரசியல் வேறு என்ற ரீதியிலாவது, முன்கூட்டியே ரெட் ஜெயண்ட் குறித்து பேச வேண்டாம் என ஆதவ்விற்கு தவெக தலைமை அறிவுறுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள்.
இரண்டாவது- 1000 கோடி ரூபாய் வருமானம். விஜய் கூட விக்கிரவாண்டி மாநில மாநாட்டில் பேசிய போது சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வரவில்லை. அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்ததை விட்டுவிட்டுதான் வந்திருக்கிறேன் என்றார். ஆனால் ஆதவ் அர்ஜுனாவோ ரூ 1000 கோடி என கூறி தற்போது தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கடந்த முறை விஜய் ரூ 80 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா சொல்வது போல் ரூ 1000 கோடி என்றால் அதற்கு ரூ 300 கோடி வருமான வரி செலுத்த வேண்டும். எனவே விஜய் மீதமுள்ள ரூ 220 கோடியை செலுத்துவாரா இல்லை, அவரது வீட்டிற்கு வருமான வரித் துறையினர் ரெய்டுக்கு வருவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பாவுவின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் விஜய் தற்போது ஆண்டுக்கு ஒரு படம் என்ற அளவில் செய்து வருகிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ 250 கோடி ஊதியம் வாங்கினால் 4 ஆண்டுகளுக்கு ரூ 1000 கோடி என்பதைத்தான் ஆதவ் சொன்னார் என தவெக நிர்வாகிகள் சமூகவலைதளத்தில் விளக்கி வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டு விஜய் ஆட்சி என கூறும் தவெகவினர், அந்த 5 ஆண்டுகளை கணக்கில் வைத்தால் ரூ 1000 கோடி நஷ்டம் என்று சொல்லி வருகிறார்கள். எது எப்படியோ ஆதவ் அர்ஜுனாவால் விஜய்க்கு சிக்கல் என்பது நிதர்சனம் என்ற விமர்சனங்களும் எழுகின்றன.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!