by Vignesh Perumal on | 2025-09-28 01:47 PM
கரூர் பேரணியில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, அந்தப் பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க உத்தரவிடக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணி அவர்களின் இல்லத்தில் இன்று (செப்டம்பர் 28, 2025) முறையீடு செய்தனர்.
கரூரில் 39 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. தரப்பில் இந்த அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க. நிர்வாகிகள் நீதிபதி தண்டபாணி இல்லத்திற்கு நேரில் சென்று, விபத்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகள் அழிக்கப்படாமல் இருக்க உடனடியாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, இந்த மனுவை நாளை (செப்டம்பர் 29, 2025) அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதால், விபத்துக்கான காரணம் மற்றும் உண்மை நிலவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்