by Vignesh Perumal on | 2025-09-17 08:41 PM
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் இன்று (செப்டம்பர் 17, 2025) நடைபெற்ற சிறப்பு முகாமை, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்தத் திட்டம் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கப்பட்டது. இம்முகாம்கள் மூலம் நகர்ப்புறப் பகுதிகளுக்கு 13 துறைகளில் 43 சேவைகளும், கிராமப்புறங்களுக்கு 15 துறைகளில் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறவும் இம்முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
இன்றைய தினம் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடைபெற்றன.
தேனி-அல்லிநகரம் வார்டு 17, 18 - பழைய அஞ்சலகத் தெருவில் உள்ள மல்லிகை மண்டபம், போடிநாயக்கனூர் வார்டு 11, 13 - சேதுமறவர் மண்டபம்,
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி - விசுவாசபுரம் சமுதாயக்கூடம்,
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் சருத்துப்பட்டி - ஜெயமருதை மண்டபம், தேனி ஊராட்சி ஒன்றியம் கொடுவிலார்பட்டி - வீருநாகம்மாள் மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற்றது.
கொடுவிலார்பட்டியில் நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார். மேலும், பட்டா, புதிய குடும்ப அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவித் திட்ட அலுவலர் கிருஷ்ணன், வட்டாட்சியர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்