by Vignesh Perumal on | 2025-09-16 03:27 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொலைத்த அல்லது திருடுபோன தங்க நகைகள், கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்கள், புதிதாக நிறுவப்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பழனி நகரில் குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சமீபத்தில் அதிநவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டு அறை, நகரின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.
இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைந்துபோன மற்றும் திருடுபோன பொருட்களைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் பழனி காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டில் ஈடுபட்டவர்கள், மற்றும் தொலைந்துபோன பொருட்களை எடுத்தவர்களை அடையாளம் கண்டனர்.
பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, பொருட்களை மீட்டு, உரிய ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்தி - பாலாஜி கதிரேசன் பழனி-திண்டுக்கல்.