by Vignesh Perumal on | 2025-09-16 11:43 AM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள புஷ்பத்தூரில், புதிதாக அமைக்கப்பட்ட எல்லைப்புறக் காவல் சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையான பழனி உட்கோட்டம் சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புஷ்பத்தூரில், இந்த எல்லைப்புறச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடி, மாவட்ட எல்லையில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற திறப்பு விழாவில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், புதிய சோதனைச் சாவடியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில், பழனி துணைக் காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன், ஆய்வாளர் தங்க முனியசாமி, உதவி ஆய்வாளர் முரளி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.