by Vignesh Perumal on | 2025-09-15 02:14 PM
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் பற்றிய கேள்விகளுக்கு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பதிலளித்தார். அப்போது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், தி.மு.க.வுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயின் வருகை தி.மு.க-வைப் பாதிக்குமா?" என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "இதைப் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை" என்றார். "எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் மக்களுக்கு நன்மைகளைச் செய்துள்ளோம். யார் வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போகட்டும். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை" என்று அவர் கூறினார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரத்திற்கு வரமாட்டார், மக்களைச் சந்திக்க மாட்டார் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது தி.மு.க.வினர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், "நாங்கள் ஏன் புலம்ப வேண்டும் என்று கேட்கிறேன். நாங்கள் செய்திருக்கின்ற திட்டங்களும், தியாகங்களும் ஏராளம். மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் இழைக்கின்ற எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே தலைவர் எங்கள் முதலமைச்சர் தான்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
ஆசிரியர்கள் குழு.......