by Vignesh Perumal on | 2025-09-13 03:45 PM
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் தனது முழு சம்பளத்தையும் இழந்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன்குமார் (23), வேடசந்தூர் அருகேயுள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக அவர், ஆன்லைன் ட்ரேடிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி, அவருக்குக் கிடைத்த முழு சம்பளப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார். இதனால், தனது குடும்பத்திற்கு மாதந்தோறும் அனுப்ப வேண்டிய பணத்தையும் அவரால் அனுப்ப முடியவில்லை. இந்த மன உளைச்சலில் இருந்த ராஜன்குமார், தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....