by Vignesh Perumal on | 2025-09-13 03:25 PM
திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து சுமார் 4 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று (செப்டம்பர் 13, 2025) காலை, திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அப்போது, திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பொன்மணிசித்ரா தலைமையில், காவலர்கள் அந்த ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, பயணிகளின் உடைமைகள் வைக்கும் இடத்தில், கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையைக் காவல்துறையினர் கண்டனர்.
சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த பையைத் திறந்து சோதித்தபோது, அதற்குள் சுமார் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ரயில் பயணிகளிடம் விசாரித்தனர். ஆனால், அந்த பை யாருடையது என்று தெரியவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவைக் கடத்தி வந்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு......