by Vignesh Perumal on | 2025-09-13 03:16 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டும், நத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் தாமதமாக வந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று (செப்டம்பர் 13, 2025), காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்திருந்தார்.
ஆனால், நத்தம் தாலுகா அலுவலகத்தில் காலை 10.42 மணி ஆகியும் வட்ட வழங்கல் அலுவலர் வரவில்லை. இதனால், ரேஷன் அட்டை திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கு குறித்துப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். "மாவட்ட ஆட்சியரின் உத்தரவைக்கூட அதிகாரிகள் மதிப்பதில்லை. இந்த அலட்சியம் தொடருமா?" என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நடத்தப்படும் ஒரு சிறப்பு முகாமில், சம்பந்தப்பட்ட அதிகாரியே தாமதமாக வந்தது, அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது.
ஆசிரியர்கள் குழு.......