by Vignesh Perumal on | 2025-09-12 05:29 PM
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சன்னிதானத்திலிருந்து பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்ட தங்கத் தகடுகளை மீண்டும் கொண்டு வர முடியாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் பழுதடைந்ததால், அவற்றைச் சரி செய்வதற்காகத் தேவசம் போர்டு சென்னைக்கு அனுப்பியிருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் முறையான அனுமதி இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அனுப்பப்பட்ட தங்கத் தகடுகளைத் திரும்பப் பெறுமாறு கேரள உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், "திருவாபரணம் தொடர்பான ஆணையர் தலைமையிலான குழு, நிர்வாக அதிகாரி மற்றும் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில்தான் இந்த வேலை மேற்கொள்ளப்பட்டது. பழுதுபார்ப்பில் ஒரு இரசாயன நடவடிக்கை உள்ளடங்கியிருந்ததால், தற்போது அதைத் திரும்பப் பெறுவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது" என்று கூறினார். இது குறித்த விரிவான அறிக்கையை மறுஆய்வு மனுவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேவசம் போர்டு மீது திட்டமிட்டுத் தவறான தகவல் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும் பிரசாந்த் குற்றம்சாட்டினார். "நாங்கள் ஏதோ குற்றம் செய்தது போலப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சந்திர கிரகணத்தின்போது தங்கம் கடத்தப்பட்டதாக ஆதாரமற்ற வதந்திகள் கூட பரப்பப்பட்டன. அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன. வீடியோ ஆவணங்களும் உள்ளன. இருப்பினும், எங்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. நீதிமன்றம் கூட எங்களை ஒருபோதும் திருடர்கள் என்று அழைக்கவில்லை. ஆனாலும் நாங்கள் வேட்டையாடப்படுகிறோம்" என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். இந்த விவகாரம், சபரிமலை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது.
இணை ஆசிரியர் - சதீஷ்குமார்