by Vignesh Perumal on | 2025-09-12 04:00 PM
இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 12, 2025) பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற எளிமையான விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கோயம்புத்தூரில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்