by Vignesh Perumal on | 2025-09-12 03:50 PM
பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின்கள் பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ஆதாயத்துக்காகவும், பெட்ரோலிய லாபியினாலும் பரப்பப்படும் அவதூறு எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்துப் பேசிய நிதின் கட்காரி, "பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின் பாதிக்கப்படும் எனத் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது. பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் பல ஆண்டுகளாக எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், என்ஜினுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்று கூறினார்.
"எனக்கு எதிராக, அரசியல் ஆதாயத்துக்காகவும், பெட்ரோலிய லாபியினாலும் சிலர் பணம் கொடுத்து இந்த அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் காற்று மாசுபாடு குறையும். எத்தனால் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். இது நாட்டின் அன்னிய செலாவணிக்கு உதவும். எத்தனால் தயாரிப்புக்குத் தேவையான கரும்பு போன்ற பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கும்போது விவசாயிகளுக்கு வருமானம் உயரும்.
எனவே, பெட்ரோலில் எத்தனால் கலப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என நிதின் கட்காரி தெரிவித்தார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்