by Vignesh Perumal on | 2025-09-11 01:34 PM
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "ஸ்டாலின் என்ற சொல்லுக்கு 'Man of Steel' (எஃகு மனிதன்) எனப் பொருள்படும். எனவே, எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்கில் வெற்றி பெறுவேன்" என ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சூளுரைத்தார்.
ஓசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "நான் எஃகு போன்ற உறுதியோடு சொல்கிறேன்; என் இலக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். தமிழ்நாடு எப்போதும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். எனவே, தமிழ்நாட்டுடன் நீங்கள் பயணித்தால் கண்டிப்பாக வெற்றிதான். அதனால், நீங்கள் எப்போதும் தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள்" எனத் தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்ட குறித்தும் அவர் பேசினார். "ஓசூரில் சுமார் 2,000 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த, அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தேன். இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க, ஓசூரில் பொருத்தமான இடம் கண்டறியப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த உரை, ஓசூரில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்