by Vignesh Perumal on | 2025-09-10 11:00 AM
கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் வனவிலங்கு நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய வனத்துறை அதிகாரிகளை, கிராம மக்கள் புலிக்கு வைத்த கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுக்கு இடையேயான மோதல் போக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் கடந்த சில மாதங்களாகப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், புலிகள் விவசாயிகளின் கால்நடைகளையும் கொன்று வருவதாகப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, விவசாயிகள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், வனத்துறையினர் புலியைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயரளவில் கூண்டு வைத்துவிட்டுச் செல்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், புலிகள் நடமாட்டம் குறித்த ஆய்வுக்காகச் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் குழுவை, அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டு, ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்த கிராம மக்கள், ஆத்திரமடைந்து, அங்குப் புலியைப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேரையும் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகளை மீட்டதாகக் கூறப்படுகிறது.
கிராம மக்களின் இந்த நடவடிக்கை, வனத்துறையினர் கடுமையாகப் பணிபுரியும் சூழலையும், அவர்களது மன உறுதியையும் பாதிக்கும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், வனவிலங்கு தாக்குதல்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டும் கிராம மக்களின் கோபமும் நியாயமானதே என சில தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்