by Vignesh Perumal on | 2025-09-09 10:15 PM
இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார்.
இன்று (செப்டம்பர் 9, 2025) காலை நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 782 ஆகும். இதில், 767 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் 457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர். கோயம்புத்தூரில் இரண்டு முறை எம்.பி.யாகப் பதவி வகித்துள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது வெற்றி, தமிழ்நாட்டிற்கு ஒரு பெருமைக்குரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்