by Vignesh Perumal on | 2025-09-09 03:18 PM
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் அவரது படங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இணையதளத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் பச்சன் தரப்பில், அவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு போலி இணையதளம் நடத்தப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இணையதளத்தில், ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் அவர் நிறுவனத்தின் தலைவராகக் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், இணையதளத்தில் அவரது உருவம் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், அவரது அனுமதியின்றி ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இது அவரது தனிப்பட்ட உரிமையைப் பாதிப்பதாக ஐஸ்வர்யா ராய் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேஜஸ் கரியா, இணையதள முகவரியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு செய்யத் தவறினால், கூகுள் உள்ளிட்ட இணையதள நிறுவனங்களுக்குத் தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, 2026 ஜனவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் குழு.......