by Vignesh Perumal on | 2025-09-09 02:53 PM
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், தனது சுற்றுப்பயணத்தை வரும் 13-ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்க உள்ள நிலையில், அவர் உரையாற்ற திட்டமிட்ட இடங்களுக்குக் காவல்துறை அனுமதி மறுத்து வருவதால், நீதிமன்றத்தை அணுக த.வெ.க. முடிவெடுத்துள்ளது.
விஜய் தனது கட்சியின் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, அவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டத்தில் பேச அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி காவல்துறை முதல் முறையாக அனுமதி மறுத்தது.
இதைத் தொடர்ந்து, திருச்சியில் உள்ள மரக்கடைப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி இரண்டாவது முறையாக மனு அளிக்கப்பட்டது. ஆனால், அங்கும் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
தற்போது, இதே மரக்கடைப் பகுதியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கவும், உரையாற்றவும் விஜய் தரப்பு மீண்டும் ஒருமுறை மனு அளித்துள்ளது. ஒருவேளை, மூன்றாவது முறையாகவும் காவல்துறை அனுமதி மறுத்தால், உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
விஜய் தனது சுற்றுப்பயணத்தை அரசியல் கட்சித் தலைவராகத் தொடங்க உள்ளதால், அவருக்கு அனுமதி அளிப்பதில் காவல்துறை மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது..
ஆசிரியர்கள் குழு........