by Vignesh Perumal on | 2025-09-08 08:19 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், இன்று (செப்டம்பர் 8, 2025) ஒரு நான்கு வயதுச் சிறுவன் நாய்க்கடிக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி கோட்டைமேடு தெரு, பஷீர் கடை சந்து அருகில், இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ஒரு நான்கு வயதுச் சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு வந்த தெரு நாய்கள், சிறுவனை சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறியுள்ளன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாய்களை அடித்துத் துரத்திவிட்டு, சிறுவனை மீட்டனர். உடனடியாக, காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
பழனியில் உள்ள கோட்டைமேடு, பேருந்து நிலையம், அடிவாரம், சண்முகநதி பகுதி உட்பட பல இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் மற்றும் வயதானவர்களும் நாய்க்கடிக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையில், நாய்க்கடிக்கு ஆளான சிறுவனுக்கு அரசு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், உரிய நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், பழனி நகரில் தெரு நாய்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அவசரத் தேவையை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
செய்தி - பாலாஜி கதிரேசன் பழனி-திண்டுக்கல்