by Vignesh Perumal on | 2025-09-08 11:38 AM
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) பொருளாளர் பொறுப்பில் இருந்த மல்லை சத்யா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்த நடவடிக்கையை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எடுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாக மல்லை சத்யா மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், அதன் காரணமாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ம.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து மல்லை சத்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, "என் மீதான இந்த நடவடிக்கை நான் எதிர்பார்த்த ஒன்றுதான்" என்று தெரிவித்தார். மேலும், அவர் வைகோ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
"ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதை இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை" என்று மல்லை சத்யா குற்றம்சாட்டினார்.
வைகோ தனது மகன் துரை வைகோவின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே சிந்திப்பதாகவும், கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளிப்பதில்லை என்றும் மல்லை சத்யா கூறினார்.
ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மல்லை சத்யாவின் நீக்கம், அக்கட்சியின் எதிர்கால அரசியல் நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்