by Vignesh Perumal on | 2025-09-06 01:26 PM
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது, தானாக நகர்ந்து வந்த மற்றொரு லாரி மோதியதில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல்-கரூர் சாலையில், பாளையம் அருகேயுள்ள பாம்பாட்டிக்களம் என்ற இடத்தில், ஈரோடு மாவட்டம், கோவிந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம் (50) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சிவானந்தம், லாரியின் பின்பக்கமாக நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், சற்று தூரத்தில் டிரைவர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி, தானாகவே நகர்ந்து வந்து சிவானந்தம் நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில், இரு லாரிகளுக்கும் இடையில் சிக்கிய சிவானந்தம், முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவானந்தத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.