by Vignesh Perumal on | 2025-09-06 01:14 PM
அ.தி.மு.க.வில் இருந்து வெளியே சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை ஒன்றிணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதானமாக யோசித்துதான் வெளியே வந்ததாகவும், பா.ஜ.க.வின் சில தலைவர்களின் போக்கு ஆணவமாக இருப்பதாகவும் பரபரப்புப் பேட்டியை அளித்தார்.
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் அவசரப்பட்டு வெளியே வரவில்லை; நிதானமாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் யார், என்ன பின்னணியில் வந்தோம் என்பது பா.ஜ.க.வுக்கு நன்கு தெரியும். ஆனால், பா.ஜ.க. எங்களை ஒரு துக்கடா கட்சியாகப் பார்க்கிறது," என்று டி.டி.வி. தினகரன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
"பா.ஜ.க. மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தவரை, கூட்டணியின் நிலைமை நன்றாகவே இருந்தது. ஆனால், தற்போது நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க முடியாத விவகாரத்தில் நயினார் அளித்த பதில் ஆணவத்தின் வெளிப்பாடு," என டி.டி.வி. தினகரன் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "2026-ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நான் கூறியதற்காக அவருடன் கூட்டணி அமைப்பதா? கூட்டணியைப் பற்றி நான் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டேன். கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்பேன்" என்று கூறினார். "அரசியலை நான் ஒரு வியாபாரமாகப் பார்ப்பதில்லை. இது அ.ம.மு.க.வின் நிலைப்பாடு. எனவே, கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளும் ஆலோசித்து எடுக்கப்படும்" என்றார். மொத்தத்தில், டி.டி.வி. தினகரனின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தி.முத்துக்காமாட்சி