by aadhavan on | 2025-09-05 02:31 PM
மதுரையில் வ.உ.சி., திருவுருவச் சிலைக்கு 'எய்ம்பா' மதுரை மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்த போது எடுத்த படம்
மதுரையில் பல்வேறு கட்சி, அமைப்புகள், சமுதாய சங்கங்கள் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் சார்பில், மதுரை மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மேயர் முத்து சிலைக்கு மரியாதை செய்து, அங்கிருந்து மாணவ மாணவிகளின் தற்காப்பு கலை நிகழ்ச்சியோடு ஊர்வலமாக கிளம்பினர். நிர்வாகிகள் பாக்கியநாதன், சண்முகசுந்தரம், ஞானசேகரன், குமரவேல், ஆதவன், பாஸ்கர், அன்னபிரகாஷ், பிரகல்யா உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திர குமார், "வ.உ.சி.,யின் நினைவு நாளையும் 'எய்ம்பா' எனப்படும் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பு சார்பில் தமிழகம் முழுதும் சிறப்புற கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவர் பிறந்த தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் நினைவு நாளில் பிரம்மாண்ட மாநாடும் நடக்க இருக்கிறது. குருபூஜை வைபவம் தமிழ்நாடு முழுக்க மிகப் பிரமாண்ட முறையில் மாநிலத் தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்