by Vignesh Perumal on | 2025-09-05 01:07 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள நடுப்பட்டி கிராமத்தில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், அதிகாரிகள் கொள்முதலைத் தாமதப்படுத்துவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி, கொள்முதலை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுப்பட்டி கிராமத்தில் உள்ள இந்த நெல் கொள்முதல் நிலையம், ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளையும் நெல்லை ஆண்டுக்கு இருமுறை கொள்முதல் செய்கிறது. இந்த நிலையத்திற்குப் பெரியகுளத்தில் இருந்து எ.வாடிப்பட்டி, குள்ளப்புரம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் முக்கியமான கிராமப்புறச் சாலை வழியாகத்தான் நெல்லைக் கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது, அதிகாரிகள் கொள்முதலைத் தாமதப்படுத்துவதால், ஆயிரக்கணக்கான மூட்டை நெல் சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கின்றன. இது ஒருவழிப் பாதை என்பதால், ஒருபுறம் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டும், மறுபுறம் வாகனங்கள் செல்லும் வழியாகவும் மாறியுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமப்படுவதோடு, அவ்வப்போது வரும் கால்நடைகளாலும் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுகிறது.
கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, விலை கொடுத்து தண்ணீரை வாங்கி நெல் சாகுபடி செய்த விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் ஏற்படும் இந்தத் தாமதத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
"கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதம் செய்கிறார்கள். இதனால், நெல் மூட்டைகளைச் சாலையோரங்களில் போட்டு வைத்துள்ளோம். இந்த திடீர் மழை வந்தால் நெல் அனைத்தும் வீணாகிவிடும் என அஞ்சுகிறோம்," என விவசாயிகள் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதால், கொள்முதல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் - தி.முத்துக்காட்சி