by Vignesh Perumal on | 2025-09-05 12:42 PM
திண்டுக்கல் அருகே செங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில், சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் செங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மூன்று பேர், காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
காவல்துறையினர் அவர்களை உடனடியாகச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் பாலக்குட்டையைச் சேர்ந்த தினேஷ் (20), மணப்பாறையைச் சேர்ந்த மோகன் (20), மற்றும் ஒரு 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆசிரியர்கள் குழு....