by Vignesh Perumal on | 2025-09-05 10:51 AM
அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்றும், இதற்காக தான் உட்பட ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியபோது அவர் ஏற்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மனம் திறந்து பேசிய செங்கோட்டையன் கூறியதாவது: "கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். 'மறப்போம், மன்னிப்போம்' என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் நேரில் சென்று வலியுறுத்தினேன். நான் மட்டுமல்ல, ஆறு முன்னாள் அமைச்சர்கள் இந்தப் பிரிந்து போனவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தோம். ஆனால், அதைக் கேட்க அவர் தயாராக இல்லை," என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
"அ.தி.மு.க. என்னும் பேரியக்கம் உடைந்து விடக் கூடாது என்பதற்காக நான் பல தியாகங்களைச் செய்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் இருந்து வெளியே சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். விரைந்து இவர்களை இணைத்தால் தான் தேர்தல் காலத்தில் வெற்றி சாத்தியம். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றால், பிரிந்து கிடந்தவர்களை நாங்களே ஒருங்கிணைப்போம்," என அவர் கூறினார். சசிகலாவை, 'சின்னம்மா' என்று குறிப்பிடாமல், அவரது பெயரை நேரடியாக செங்கோட்டையன் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என எம்.ஜி.ஆர். தன்னை வற்புறுத்தியதாகவும், அந்தத் தொகுதி தனக்குப் புதியது என தான் கூறியபோது, "என் பெயரைச் சொல், நீ வெற்றி பெறுவாய்" என எம்.ஜி.ஆர். கூறியதாக செங்கோட்டையன் நினைவுகூர்ந்தார். மேலும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆளுமைமிக்க தலைமை கட்சிக்குத் தேவை என தாங்கள் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியதாகவும், அவர் கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு ஆட்சியையும் மிகச் சிறப்பாக நடத்தியதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் தொடக்கத்தில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்திவிட்டுப் பேசத் தொடங்கினார். இந்தச் சந்திப்பில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்