by Vignesh Perumal on | 2025-09-05 05:57 AM
கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த 'சுறா' திரைப்படம் திரையிடப்பட்டபோது, திண்டுக்கல் கணேஷ் திரையரங்கில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக விஜய் ரசிகர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.
கடந்த 2010-ஆம் ஆண்டில், திண்டுக்கல் கணேஷ் திரையரங்கில் 'சுறா' திரைப்படம் வெளியானது. அப்போது, பட வெளியீட்டில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக, விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் வாசுதேவன் (எ) தேவா மற்றும் சில நிர்வாகிகள் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் கடந்த 15 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில், த.வெ.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ஆசிப், சதீஷ்குமார், ஜான் ஜோசப், குருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வாசுதேவன் (எ) தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்தத் தீர்ப்பு, விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்