by Vignesh Perumal on | 2025-09-04 03:33 PM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனித்தனியாகச் செயல்பட்டு வந்தனர். இந்த சூழலில், கடந்த ஜூலை 11, 2022 அன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல்குமார் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று (செப்டம்பர் 4, 2025) தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பில், அ.தி.மு.க பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவது உறுதியாகியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு...