by Vignesh Perumal on | 2025-09-03 09:08 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ₹17,000 மதிப்பிலான 400 லாட்டரி சீட்டுகள், 5 செல்போன்கள், மற்றும் ₹5,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் கௌதம் தலைமையில், சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டாஸ்பத்திரி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த வினோத்குமார் (29), விக்னேஸ்வரன் (33), நசீர் (38), மற்றும் கமலேஸ்வரன் (19) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் ₹17,000 மதிப்புள்ள 400 லாட்டரி சீட்டுகள், 5 செல்போன்கள் மற்றும் ₹5,000 ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைதான நபர்கள், தேனி, மதுரை, பழனி போன்ற பகுதிகளில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து வத்தலக்குண்டு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வத்தலக்குண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி -மோகன் கணேஷ் திண்டுக்கல்