by Vignesh Perumal on | 2025-09-03 02:30 PM
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 108 அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தின்போது, போக்குவரத்தைச் சரிசெய்ய முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 108 அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் நிர்மல்குமார் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், "திருச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், "இது ஒரு தனிப்பட்ட சம்பவம். இதை எப்படி ஒரு பொதுவான நிகழ்வாக எடுத்துக்கொள்வது?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், "யாராக இருந்தாலும், தவறு செய்தால் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.
இறுதியாக, இந்த விவகாரம் குறித்து விரிவான பதில் மனுவை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு, தமிழக காவல்துறை தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - தி. முத்துக்காமாட்சி