by Vignesh Perumal on | 2025-09-01 02:36 PM
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வரி முறைகேடு விவகாரத்தில், ஏற்கெனவே மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி என பல கோடி ரூபாய் வரி செலுத்தப்படாமல் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில், மாநகராட்சி அதிகாரிகளின் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ்வேர்டுகளை) சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வரி முறைகேடுகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகைகுளம் பாதுஷா, கோவில் பாப்பாக்குடி கார்த்திக் இந்த இருவரும், பல்வேறு கணக்குகளில் வரி செலுத்தப்பட்டதாக போலியாகப் பதிவு செய்து, அதன் மூலம் வரிப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் குழு....