by Vignesh Perumal on | 2025-08-31 10:21 PM
பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கிவிட்டு, உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் தமிழ் மொழிக்கு மிகக் குறைந்த தொகையை ஒதுக்கி மத்திய பாஜக அரசு வஞ்சனை செய்வதாகக் குற்றம்சாட்டி, திமுக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள முக்கியப் பகுதிகளில், திமுகவின் ஒன்றிய அவைத்தலைவர் உடையாளூர் U.S.R. லோகநாதன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், "மொழிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில், பேச்சு வழக்கிலேயே இல்லாத சமஸ்கிருதத்திற்கு ₹2,533 கோடி; 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ₹114 கோடி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "தமிழையும், தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும் பாஜகவை அடிமைகள் ஆதரிக்கலாம், தமிழர்களாய் நாம் எதிர்ப்போம்!" என்றும் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக, "தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் (பிராமணர்கள் உட்பட) தமிழரே!" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர்கள், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது நீண்டகாலமாகவே எழுப்பப்படும் ஒரு குற்றச்சாட்டு. இந்த நிலையில், இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆசிரியர்கள் குழு......