by Vignesh Perumal on | 2025-08-30 09:58 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் மலைக்கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல்வேறு புண்ணியத் தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், வேத விற்பன்னர்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கோபுரக் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது, கோயில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா" எனப் பக்தி கோஷங்களை முழங்கினர்.
விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கும்பாபிஷேக விழாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும், அவர் தனது பண்ணை வீட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலர் சுந்தரி, தென்கரை பேரூராட்சித் தலைவர் நாகராஜ், கோயில் பராமரிப்புக் குழுத் தலைவர் வி.பி. ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், முன்னாள் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ஓ.ராஜா, அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. பெரியகுளம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இணை ஆசிரியர் - சதீஷ்குமார்