by Vignesh Perumal on | 2025-08-30 04:55 PM
மனைவியின் தங்கையைக் காதலித்த இளைஞர் ஒருவர், அவரைத் திருமணம் செய்து வைக்கக் கோரி, மின்சாரக் கோபுரத்தின் மீது ஏறி நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் சக்சேனா (26) என்பவருக்கு 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, தனது மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ராஜ் சக்சேனாவுக்கு, தனது இரண்டாவது மனைவியின் இன்னொரு தங்கையின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காதல் விவகாரத்தை அவர் தனது மனைவியிடமே வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, அவரைத் திட்டி வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால், மனமுடைந்த ராஜ் சக்சேனா, திடீரென மின்சாரக் கோபுரத்தின் மீது ஏறி, "எனது கொழுந்தியாளைக் காதலிக்கிறேன். அவரை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்" என்று கத்தி கூச்சலிட்டுப் போராட்டம் நடத்தினார்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜ் சக்சேனாவை கீழே இறங்குமாறு சமாதானம் செய்தனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக, அவரது மனைவியின் தங்கையை அவருக்குத் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கப்பட்ட பின்னரே, ராஜ் சக்சேனா கீழே இறங்கி வந்தார்.
கீழே இறங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் சக்சேனா, "எனது கொழுந்தியாளும் என்னைத்தான் காதலிக்கிறார். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம்" என்று கூறினார். இந்தச் சம்பவம், அவரது குடும்பத்தினரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு....