by Vignesh Perumal on | 2025-08-30 04:35 PM
அதிமுகவில் நிலவி வரும் பிளவுகளைப் பயன்படுத்தி திமுக குளிர் காய்ந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தமிழக மக்களின் நலன் காக்க அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுகவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
சசிகலா தனது கடிதத்தில், “அதிமுக ஒற்றுமை குலைந்தால், அது தமிழக மக்களின் நலனுக்கு நல்லதல்ல. 'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்ற பழமொழிக்கேற்ப, நாம் பிளவுபட்டிருப்பதால், தி.மு.க. இப்போது குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அனைவரின் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அம்மா (ஜெயலலிதா) விட்டுச் சென்ற பணியைத் தொடரவும், தமிழக மக்களின் நலன் காக்கவும், அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் தனித்தனியாகச் செயல்பட்டு வரும் நிலையில், சசிகலாவின் இந்த திடீர் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் இந்த முயற்சி, அதிமுகவில் உள்ள இரு அணிகளையும் ஒன்றிணைக்க உதவுமா அல்லது மேலும் பிளவுகளை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் குழு.....