by Vignesh Perumal on | 2025-08-25 02:14 PM
திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, "சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம்" என்ற தலைப்பில், ஒரு பிரமாண்டமான ஓவியக் கண்காட்சி திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் உள்ள சௌபாக்கியா அரங்கில் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசிய பாலகிருஷ்ணன், "வரலாறு என்பது மக்களின் உரிமை, அதை ஒருபோதும் தவிர்க்க முடியாது. கடந்த காலத்தின் பெருமையை மட்டும் பேசுவது வரலாறு அல்ல. நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் திட்டமிட வரலாறுதான் வழிகாட்டுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழந்தமிழ் கூற்றின்படி, இந்த இளம் தலைமுறையினர் ஓவியக் கலை மூலம் சிந்து வெளி, கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற நாகரிகங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். இது, வரலாறு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அனைவரும் உணர்ந்து கொள்ள வழிவகுக்கும்" என்று கூறினார்.
இந்தக் கண்காட்சியில், இளம் ஓவியர்கள் வரைந்த 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிந்துவெளி தமிழ் எண்கள், சிந்துவெளி முத்திரைகள், தமிழ் தாய், கீழடி வைகை ஆறு சிறப்புகள், மொஹஞ்சதாரோ பெருங்குளியலிடம், சங்க இலக்கியத்தில் நீர் விளையாட்டு போன்ற தலைப்புகளில் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
செம்பு, வெண்கலக் காலம், பானை கோட்டோவியம், எருமை, ஐராவதம், மகாதேவன், சேவல் சண்டை, சிங்கம், யானை, ஜல்லிக்கட்டு காளை போன்ற பண்டைய சின்னங்கள் ஓவியங்களாக வடிமைக்கப்பட்டிருந்தன.
கீழடி சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்த பகடை, தேனூரில் கிடைத்த தங்கக் கட்டிகள், அழகன்குளம் அகழாய்வு, வன்னி மரம், உறை கிணறு, நடுகல், மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு போன்ற தொல்லியல் எச்சங்கள் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன.
கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் ஒவ்வொரு ஓவியம் குறித்த முழுமையான தகவலையும் அறியும் வகையில், ஒவ்வொரு ஓவியத்திற்கும் அருகில் QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் அதை ஸ்கேன் செய்து தகவல்களைப் பெறலாம்.
திரைப்படக் கலை இயக்குநர் ராஜசேகரன் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கிய இந்தப் பிரமாண்டக் கண்காட்சியின் பரிசளிப்பு விழா, மூன்று நாட்களுக்குப் பிறகு நடைபெறும். இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் மற்றும் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பரிசுகளை வழங்க உள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்