by Vignesh Perumal on | 2025-08-24 11:14 AM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில், வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோயில் அருகே, கணேசன் (30) என்பவரை சின்னக்காளை (35) என்பவர் வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தாக்குதலில் கணேசன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னக்காளை என்பவரைத் தேடி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்