by Vignesh Perumal on | 2025-08-20 04:27 PM
மதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, மதிமுகவின் மூத்த நிர்வாகியும், துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சி சட்ட திட்டங்களை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டதே இந்தத் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிகிறது.
தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள மல்லை சத்யாவுக்கு, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த காலத்திற்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வைகோ உத்தரவிட்டுள்ளார்.
மல்லை சத்யா எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கத் தவறினால், அவர் மீது கட்சி விதிகளின்படி அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வைகோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்