by Vignesh Perumal on | 2025-08-20 04:12 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், மாநாட்டின் தொடக்கமாகக் கொடியேற்ற இருந்த 100 அடி உயரக் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒரு கார் பலத்த சேதமடைந்தது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக, பிரம்மாண்டமான நுழைவு வாயிலில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இன்று காலை, இந்தக் கொடிக்கம்பத்தை ராட்சத கிரேன் உதவியுடன் நிறுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, கொடிக்கம்பம் நட்டு சில நிமிடங்களுக்குள் எதிர்பாராதவிதமாகச் சாய்ந்து விழுந்தது. அருகிலிருந்த தவெக நிர்வாகி ஒருவரின் கார் மீது கம்பம் விழுந்ததில், கார் முழுவதும் சேதமடைந்தது. நல்லவேளையாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த திருமங்கலம் ஏ.எஸ்.பி. அன்சூல் நாகூர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து குறித்துத் தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிக எடை கொண்ட கம்பம் என்பதால், காலையிலிருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதையும் மீறிச் சிலர் உள்ளே வந்தனர். இது ஒரு சிறிய விபத்துதான். சாய்ந்த கம்பத்திற்கு மாற்று ஏற்பாடு குறித்துத் தலைவரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு பெரிய இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விபத்து, தவெக மாநாட்டு ஏற்பாடுகளில் சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்