by Vignesh Perumal on | 2025-08-20 03:57 PM
சென்னையில் ₹5 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்த, "5 ரூபாய் டாக்டர்" எனப் பிரபலமாக அறியப்பட்ட மருத்துவர் வேணி (71) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவு சென்னை மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாக்டர் வேணியின் கணவர், மருத்துவர் ஜெயச்சந்திரன், கடந்த 48 ஆண்டுகளாக ₹5 மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். அவர் 2018ஆம் ஆண்டு காலமான பிறகு, அவரது மனைவி டாக்டர் வேணி, கணவரின் கனவைத் தொடர்ந்து, அதே ₹5 கட்டணத்துடன் மருத்துவ சேவையைத் தொடர்ந்து வந்தார்.
அவரது நீண்ட கால மருத்துவ சேவையில், அவர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களைப் பார்த்துள்ளார். பல ஏழை மக்கள் இவரது மருத்துவ சேவை மூலம் பயனடைந்துள்ளனர்.
டாக்டர் வேணி காலமான செய்தி அறிந்ததும், அவரை அறிந்த மக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழை எளிய மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த ஒரு சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் காலமானது, ஒரு பெரிய இழப்பு என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்ற மக்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தவும், தங்களது சோகத்தைப் பகிர்ந்து கொள்ளவும் குவிந்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்