by Vignesh Perumal on | 2025-08-20 11:00 AM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் நகரில் உள்ள 4 இடங்கள் உட்பட மொத்தம் 5 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, அண்ணா சாலையில் உள்ள முபாரக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கலையரங்கம் அருகே உள்ள ஆம்பூர் பிரியாணி கடை ஒன்றில் சோதனை நடைபெறுகிறது. டிப்போ பகுதியில் உள்ள மற்றொரு ஆம்பூர் பிரியாணி கடையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேல்மலைப் பகுதியான பூம்பாறை மற்றும் லேக் ரோடு பகுதியில் உள்ள இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாகப் பிரிந்து இந்தச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது, சில முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளாவில் உள்ள சில அமைப்புகள் மற்றும் நபர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கொடைக்கானலில் சோதனை நடைபெறும் நபர்களுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்