by Vignesh Perumal on | 2025-08-19 10:35 AM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, வேலை இழந்த ஆத்திரத்தில் சக தொழிலாளியை சுத்தியலால் அடித்துக் கொன்ற வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த கருமாத்தநாயக்கனூரைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவர் ஒரு தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சில காலத்திற்குப் பிறகு, தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அதே பகுதியைச் சேர்ந்த வையப்பன் (55) என்பவரை வேலைக்கு நியமித்தார். இதனால், சக்திவேல் வையப்பன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, சக்திவேல் வையப்பனிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சக்திவேல் சுத்தியலால் வையப்பனைத் தலையில் அடித்துக் கொன்றார். இது குறித்துத் தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சக்திவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பழனியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி மலர்விழி அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி சக்திவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு, குற்றம் புரிந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்