| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

தீர்மானத்தை தடுத்த அதிகாரி...! 18 கிராமம் இணைந்த கண்டன போஸ்டர்கள்...! பெரும் பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2025-08-18 05:52 PM

Share:


தீர்மானத்தை தடுத்த அதிகாரி...! 18 கிராமம் இணைந்த கண்டன போஸ்டர்கள்...! பெரும் பரபரப்பு...!

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், பூதமங்கலம் ஊராட்சியில் சிப்காட் திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கிராமசபைத் தீர்மானத்தை, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து, 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, நல்லசுக்காம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பூதமங்கலம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில், நாகப்பன் சிவல்பட்டி, நல்லசுக்காம்பட்டி, மூவன் சிவல்பட்டி, பெரியசிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இப்பகுதியில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தால் விவசாயம், கால்நடை மேய்ச்சல் போன்ற வாழ்வாதாரங்களும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள், தொல்லியல் எச்சங்கள் போன்ற பாரம்பரியச் சின்னங்களும் பாதிக்கப்படும் என மக்கள் கவலை தெரிவித்தனர். எனவே, இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

கிராமசபைக் கூட்டத்தின் முடிவில், தீர்மான நகலைக் கேட்டபோது, பூதமங்கலம் ஊராட்சி செயலாளர், "கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன் அரசுத் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது எனத் தொலைபேசியில் மிரட்டித் தன்னிடம் கூறியதாகவும், இதனால் தன்னால் அந்தத் தீர்மானத்தை ஏற்க முடியவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கிராமசபையில் மக்களுக்கு உள்ள அதிகாரத்தில் தன்னிச்சையாகத் தலையிட்டு அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், பின்வரும் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதில், கிராமசபையில் மக்களுடைய அதிகாரத்தைப் பறிக்கும் செயலில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியனை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

கிராமசபை அதிகாரத்தில் தலையிடும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சிப்காட் அமையவுள்ள வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுவரொட்டிகள், கிராமசபையின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. அரசின் திட்டத்திற்கு எதிராக மக்கள் தீர்மானம் நிறைவேற்றியது ஒருபுறம் இருக்க, அந்தத் தீர்மானத்தை அதிகாரி ஒருவர் தடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






இணை ஆசிரியர் - சதீஷ்குமார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment